Monday, August 23, 2010

நமி தீவு, தென் கொரியா

சென்ற வாரம் தென் கொரியாவில் உள்ள நமி தீவிற்கு, எனது தம்பி மற்றும் நண்பிகள் படைசூழ சென்று வந்தோம். அந்த வியத்தகு அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

காலை  9.30 மணிக்கு புறப்பட வேண்டிய நாங்கள், சில பல காரணகளினால் 10.15 மணிக்கு ஒரு வழியாக காரில் புறப்பட்டோம். நாங்கள் புறப்படும் இடத்தில் இருந்து நமி தீவு 72 கிலோமீட்டர் என்று GPS காண்பித்தது. கொரியா தேசிய நெடுஞ்சாலைகளில் 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். எப்படியும் ஒரு மணிநேரத்தில் அந்த தீவை அடைந்து விடலாம் என்று நினைத்தோம். அன்று வானிலை அறிக்கை, கனத்த மழை பெய்யும் என்று சொல்லி இருந்தார்கள்.  நாங்கள் கிளம்பிய சிறிது நேரத்தில் பகல் இரவாக மாறியது. கனத்த இடியுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. காரின் வேகம் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே சென்றது. அன்று வார இறுதியின் முதல் நாள். வழியெங்கும் வாகனகள். மழை வேறு. சிறிது நேரம் ஊர்ந்து கொண்டு சென்ற எங்கள் வாகனம், பல இடங்களில் நின்று நின்று சென்றது. கார் A/c யின் அளவை முழுவதுமாக குறைத்தோம். 

நம்மூர் நெடுஞ்சாலை கடைகளை போல இங்கும் நிறைய கடைகள். விற்பதெல்லாம் பூச்சிகளையும் கருவாடுகளையும் மக்காசொளதையும் தான். மணி மதியம் 12.00 ஐ அடைந்தது. நாங்கள் கொண்டு சென்ற சில நொறுங்கு தீனிகளை மொய்த்து 1.00 மணி அளவில் மதிய உணவு சாப்பிடலாம் என்று தீர்மானித்தோம். கார் ஊர்ந்து செல்ல நேரம் வேகமாக சென்றது. மதியம் ஒரு மணியும் ஆனது. சாப்பிடலாம் என்று உணவகத்தை தேடினோம். நல்ல உணவகத்தை வழியில் தேடுவதில் ஒரு முப்பது நிமிடம் ஆகியது. பிறகு எதேச்சையாக GPS ஐ பார்க்கையில், அருகில் இருந்த பியானோ கழிபிடத்தை காண்பித்தது. அங்கு சென்றால் நல்ல உணவகம் இருக்கும் என்று எனது கொரிய நண்பி (வயது 46, அவர்தான் காரை ஒட்டி சென்றார்) சொன்னார். 

ஒரு வழியாக அந்த பியானோ கழிப்பிடத்தை அடைந்தோம். என்ன ஆச்சர்யம்!!! அந்த கழிப்பிடம் பார்ப்பதற்கு பியானோ வடிவில் இருந்தது. படிக்கட்டுகளில் கால் வைத்தவுடன் பியானோ இசை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. அப்படி அந்த கட்டிடத்தை வடிவமைத்து உள்ளார்கள். அருகிலேயே ஒரு அழகான அருவி நீரை கொட்டிக் கொண்டிருந்தது. அதுவும் அது தானியங்கி அருவியாம்.. இரண்டாவது ஆச்சர்யம்!!!. அங்கு சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். அங்கிருந்து கிளம்பி ஒரு கொரிய உணவகத்தை வந்தடைந்தோம். சாப்பாடு மற்றும் மீன் உன்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். இப்போது மீண்டும் சாலை டிராபிக்.. என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது தூரம் ஊர்ந்து சென்றோம். பின், சாலை நெரிசல் தடையில்லை. கார் தன் வேகத்தை அதிகரித்தது. 20 நிமிட பயணத்துக்கு பின் நமி தீவை வந்தடைந்தோம். அனுமதி சீட்டை வாங்கிக்கொண்டு படகை பிடித்து தீவை சென்று அடைந்தோம். 


இந்த தீவு கொரிய நாடகமான " Winter Sonata" விற்கு பெயர் பெற்றது. அந்த நாடகத்தை இந்த தீவில் தான் படம்பிடிப்பார்களாம். மொத்த தீவும் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவு தான் இருக்கும். அழகாக அந்த தீவை செதுக்கி இருகிறார்கள். பூங்காக்கள், சிலைகள், கூடங்கள் என்று எதிலும் குறை வைக்கவில்லை. சுற்றி பார்த்துவிட்டு சிறிது நேரம் ஐஸ்கிரீம் சாப்பிட்டு இளைப்பாறினோம். மீண்டும் மழை... சிறிது நேரம் அங்கிருந்த கடைகளில் அமர்ந்துவிட்டு மீதும் படகை வந்தடைந்தோம். டிராபிக் இல்லாமல் சீக்கிரம் வீட்டிற்கு சென்றால் போதும் என்று நினைத்துக் கொண்டே படகு பயணத்தை முடித்தோம். மீண்டும் கார் பயணம். நல்லவேளை இப்போது டிராபிக் அதிகம் இல்லை. 1.40  மணி நேரத்தில் கொரிய தலைநகர் சியோலை அடைந்தோம். எனது இந்திய நண்பி மற்றும் நாங்கள் சப்வே ரயில் நிறுத்தத்தில் இறங்கிவிட்டு அந்த கொரிய நண்பிக்கு பிரியா விடை கொடுத்தோம். 


எனது நண்பி அங்கிருந்து சப்வே ரயிலில் ஒரு திசையில் செல்ல நாங்கள் இருவரும் எதிர் திசையில் சென்றுஇரவு 10 மணியளவில் வீட்டிற்க்கு வந்தோம். 

நமி தீவு அனுபவம் என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று.

மேலும் படங்கள்...